ஓசூரில் உள்ள தனியார் உணவகத்தின் மேல் தளத்தில் போலீசார் சோதனை நடத்தி விசாரணையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை மீட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்திய உணவக உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மேல் தளத்தில் பெண்களிடம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது தலைமையில் ஒசூர் அட்கோ காவல் துறையினர் குறிப்பிட்ட தனியார் உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
3 பெண்களை மீட்டபோலீசார்
இந்த விசாரணையில் அந்த உணவகத்தில் மூன்று பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, உணவக உரிமையாளர் ஓசூர் கைரளி நகரைச் சேர்ந்த பிஜூ (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பிஜூ ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால்
ஓசூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுவரை காவல் துறையினர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்களை மீட்டு மறுவாழ்வுக்காக பெண்கள் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஓசூர் பகுதிகளில் விபச்சார தொழில் நடப்பது தெரிந்தால், பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களின் ரகசியம் காக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.