தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K.குமரெட்டையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளின் வழியாக JSW நிறுவனம் சார்பில் உயர்மின்னழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்படுவது கண்டித்து JSW காற்றாலை நிறுவனம் மீதான எதிர்பார்ப்பையும், அதிகாரிகள் மீதான அதிருப்தியையும் காட்டு விதமாக தங்களது “வீடுகளில் கருப்புக்கொடி கட்டி” போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம மக்கள் தற்போது கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை திருப்பி ஒப்படைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K. குமரெட்டையாபுரம் கிராமத்தில் JSW என்ற தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் கடந்த சில நாட்களாக உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு அமைக்கப்படுகின்ற உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் மக்கள் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்படுவதை கண்டித்தும், மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கடந்த மார்ச் 3-ம் தேதி தங்களது வீடுகளை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள ஊரணியில் அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு “ஊரை விட்டு ஊரணியில் குடியேறும் போராட்டம்” என்ற போராட்டத்தை நடத்தினர்.
அப்போது அங்கு சென்ற துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், வட்டாட்சியர் தலைமையில் கிராம மக்கள் மற்றும் JSW நிறுவனத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சுமூகமான தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று (08.03.2023) நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பதால் இன்று K.குமரெட்டையாபுரம் கிராம மக்கள் JSW நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பையும், அதிகாரிகள் மீதான அதிருப்தியையும் காட்டும் விதமாக தங்கள் வீடுகள் மற்றும் கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி K.குமரெட்டையாபுரம் கிராம மக்கள் தற்போது கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை திருப்பி ஒப்படைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.