திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மகன் சுபாஷ் (25). டிரைவராக பணியாற்றி வரும் சுபாஷ், அதே பகுதியை சேர்ந்த சேகர் மகள் அஷ்டலட்சுமி (20) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சுபாஷ், அஷ்டலட்சுமியை அழைத்து வந்து ஊருக்கு வெளியே திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து சோத்தக்குடிக்கு வந்த சுபாஷ் அஷ்டலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுபாஷ் தினமும் குடித்துவிட்டு வந்து அஷ்டலட்சுமியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு சுபாஷ் எலிக்கறி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில் மனமுடைந்த அஷ்டலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அஷ்டலட்சுமியின் கதவை தட்டினர். வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அஷ்டலட்சுமி சுவரில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக நன்னிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஷ்டலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வேலைக்குச் சென்ற சுபாஷ், தகவல் அறிந்து வீட்டுக்கு வந்தார். ஒரு மணி நேரத்தில் சுபாஷ் அருகில் உள்ள பருத்தி ஆலைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.