கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமம் உள்ளது. நேற்று தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் அவரது மகன் அஸ்வின் மற்றும் தங்கையின் மகள் சங்கமித்ரா ஆகியோர் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சகஜமாக பழகி அவர்களுக்கு பேன் பார்த்தது. இந்த தகவல் அறிந்து ஊர் மக்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் இதனை காண்பதற்காக ஏழுமலையின் வீட்டிற்கு வந்தனர்.
கூட்டமாக இருந்த போதிலும் குரங்கு சிறிதும் அச்சமின்றி மாணவர்களை அழைத்து அவர்களது தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த காட்சியை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ அப்பகுதியில் உள்ள சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குரங்கு பள்ளிக் குழந்தைகளுடன் சகஜமாக பழகி பேன் பார்க்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.