15லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவர் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கந்தனும் அவரது கடையில் பணியாற்றும் ஹரி இருவரும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி மளமளவென பெட்ரோல், ஆயில் உள்ளிட்டவை கொழுந்து விட்டு வெடித்து சிதறி கரும்புகையுடன் தீ எரிந்தது. இதனால் கடையில் இருந்து கந்தன் மற்றும் ஹரி இருவரும் அலறியடுத்தபடி வெளியே ஓடி வந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு படை வீரர்கள் மெக்கானிக் ஷாப்பில் கொழுந்து விட்டு பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கட்டுக்குள்
மெக்கானிக் கடைக்கு அருகில் இருந்த பேன்சி ஸ்டோர், டீக்கடைகளிலும்தீ லேசாக பரவியதால் அந்தக் கடைகளின் ஷட்டரையும் உடைத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மெக்கானிக் கடையில் இருந்த இருசக்கர வாகனங்கள், அருகில் இருந்த கடைகளில் இருந்த பொருட்கள் என சுமார் 15லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.