மிர்பூர்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. பங்களாதேஷ் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் லிதன் தாஸ் அதிகபட்சமாக 57 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். நஜ்முல் உசைன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் 53 ரன்களும், கேப்டன் பட்லர் 40 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் ஈர்க்கவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. இன்றைய ஆட்ட நாயகனாக லிதன் தாஸ் தெரிவானார். தொடரின் நாயகனாக நஜ்முல் உசைன் தெரிவானார்.