அரசு நலத்திட்ட உதவிகள்:
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 744 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அனைத்துத்துறைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில், மேலூர் வட்டம், கீழையூர் கிராமத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் 744 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இப்பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. எனவே, விவசாயத்தில் எப்படியெல்லாம் வருமானம் ஈட்டலாம் என்றும், மகசூலை அதிகளவில் பெருக்குவது எவ்வாறு என்பது குறித்து நில அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயத் தொழில்களுக்கு தேவையான முதலீட்டினை கூட்டுறைவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இக்கடன்களை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல, சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும்.
பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்:
ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்களும், இளைஞர்களும் வேலைவேண்டி விண்ணப்பம் சமர்ப்பித்து வருகின்றனர். இளைஞர்கள் சுயதொழல் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும். மேலும், அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, முதலீட்டுக்கு தேவையான கடனுதவியை 30 சதவிகிதம் மானியத்துடன் தமிழக அரசு வழங்கி வருகின்றது.
கொரோனா காலக்கட்டங்களில் குழந்தைகளின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதை தமிழக அரசு கருத்திற்கொண்டு அந்தந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பொதுவான இடத்தில், ஒரு தன்னார்வலர் மூலம் அக்குழந்தைகளுக்கு கல்வி புகட்டப்பட்டது. அதேபோல், சிறுவயது குழந்தைகள் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் எளிய முறையில் கல்வி கற்பதற்கு பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் என்ற திட்டம் செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, ஆரோக்கியமான உணவு பழக்கம் போன்றவை மிகவும் முக்கியமாகும். இவற்றை முறையாக குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வழங்குவது நம் அனைவரது கடமையாகும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சௌந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சீலா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.