திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அருகே ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் மதகு கால்வாயை திமுக பிரமுகர் ஒருவர் ஜேசிபி மூலம் மண் கொட்டி அடைத்து உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட களாம்பாக்கம் கிராமத்தில் ஏரி பாசனத்தை நம்பி பத்துக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் பயிர் வைத்து வருகின்றன
அதே பகுதியில் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் அப்பகுதி ஏரி பாசன சங்க தலைவருமான பன்னீர்செல்வம் என்பவரும் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக ஏரி பாசன நீர் செல்லும் மதகு கால்வாயை கடந்த மாதம் திமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவர் ஜே சி பி இயந்திரம் மூலம் மண் கொட்டி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி புகார் மனுவை அளித்திருந்தனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.