குஜராத்தில் நடைபெற உள்ள தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடும் விழா திண்டுக்கல்லில் உள்ள சௌராஷ்டிரா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் வருகின்ற 14.4.2023-ம் தேதி முதல் 23.4.2023 வரை 10 நாட்கள் குஜராத் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு நாடெங்கிலும் பரவலாக வசிக்கும் சௌராஷ்டிரா இன மக்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், அவர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அனைவருக்கும் பறைசாற்றும் வகையிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, கும்பகோணம் ,திருச்சி,பரமக்குடி சேலம்,தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள சௌராஷ்டிரா மக்களை சந்தித்து சௌராஷ்டிரா “தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி குஜராத் மாநில அரசு சார்பாக 8 அமைச்சர்களை தமிழகத்திற்கு அனுப்பி 8 மாவட்டங்களில் எட்டு அமைச்சர்களும் தலைமையேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று சௌராஷ்டிர இன மக்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பங்கேற்க அழைப்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் மாநில மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துறை தொடக்க,மேல்நிலை மற்றும் உயர் கல்வி அமைச்சர் குபேர் பாய் திண்டோர் மற்றும் துறை செயலர் டாக்டர். முரளி கிருஷ்ணா ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
குஜராத்தில் நடைபெறுகின்ற சௌராஷ்ட்ரா சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு பயன்படும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் பங்கு பெறலாம்.முதல் ரயில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் பங்கேற்பாளர்களுக்கு குஜராத் மாநில அரசின் சார்பில் தங்கும் வசதி, உணவு மற்றும் பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்ஜோதி, கண்ணன், ராமமூர்த்தி,எஸ்.வி.ராமமூர்த்தி, சிவராம், பாபுலால், கார்த்திகேயன், சதீஷ்,ஹரிஹரன், முரளிதரன் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் பாஜகவின் மாவட்ட தலைவர் தனபாலன் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.