வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அக்ஸிலியம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 67வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், துணை மேயர் சுனில் குமார், ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் காவேரி அம்மாள்,ஆக்சிலியம் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெயசாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி வழியாக ஒரு சில பேருந்துகள் செல்வதில்லை. அப்படி செல்லாத பேருந்துகளின் உரிமையை (பெருமீட்டை) மறுநாளே ரத்து செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன். இதை நான் ஆணையாகவே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மகளிர் கல்லூரி ஆரம்பிக்கும்போது 67 மாணவிகள் தான் படித்தார்கள் என கூறினார்கள்.
இயேசு நாதரின் பின்னால் ஆரம்ப கட்டத்தில் 12 பேர் தான் இருந்தனர் ஆனால் உலகம் இன்றைக்கு அவர் கையில் உள்ளது. ஒரு காலத்தில் கல்வியில் நாம் முன்னேறி இருந்தோம். ஒரு மொழிக்கு இலக்கியம் வகுத்து தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு என பல நூல்களையும் இயற்றியிருந்தோம். பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தோம் பூம்புகார் கரையில் இருந்து. அப்படி இருந்த ஒரு நாகரீகம் திடீரென மண் முடி போய் நம் இனம் என்ன? மொழி என்ன? என்பது எல்லாம் மறைந்து போய் நாம் யார் என்பது மறந்து போய்விட்டது.
அப்படி மறந்து போனவனை ஞாபகப்படுத்தியது இதே கிறிஸ்தவ மதம் தான் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தை பரப்ப வந்த கார்டுவெல் சொன்னார் உன் மொழி தமிழ் மொழி, அதில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு அதிலிருந்து பிறந்தது தான் கன்னடம் அதன் பின் பிறந்தது தான் மலையாளம் என ஞாபகப்படுத்தியவர் கார்டு வெல். எழுத்தை அச்சில் காட்டியது சீமல் பாபு தரங்கம்பாடியில், அழிந்து போன மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்தை ஆய்வு செய்து பாதர் மார்செல் கண்டுபிடித்துவிட்டு இது திராவிட சீவிலைசேசன் என கூறினார்.
வெள்ளைக்காரன் நம்மை ஆண்டான் அது வேறு ஆனால் அவன் வராமல் போயிருந்தால், அதையொட்டி கிறிஸ்தவ மதம் உள்ளே நுழையாமல் இருந்திருந்தால் நமக்கு நாம் யார் என்பதே மறைந்து போயிருக்கும். தமிழர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் எல்லாம் செய்து கொடுத்தவர்கள் அவர்கள். அவர்கள் தான் இந்த கல்வியை நாம் கற்க வேண்டும் என்று ஆங்காங்கே கல்வி நிலையங்களை கட்டி எழுப்பினார்கள். எனவே அதனை நன்றி பெருமையோடு நினைத்துப் பார்க்க வேண்டும். மதம் என்பது மனிதர்களை சாகடிக்க கூடியது தான்.
கேரளத்தில் நம்பூதிரி இனத்தை தவிர மற்ற பெண்கள் யாரும் தொப்பிலுக்கு கீழேயும் மார்பு முழுவதையும் மறைத்தபடி சேலை அணியக்கூடாது என்ற கொடுமை நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனம் இருந்தது கேரளத்தில். அதை ஒழித்துக் கட்டியது கூட இப்படிப்பட்ட கிறிஸ்தவ மதம் தான். ஆகவே அவர்கள் நாகரீகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள். நமக்கு வரலாறு, மொழி, இனத்தை சொல்லிக் கொடுத்தது அவர்கள்தான்.
இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவரே அண்ணா அவர்கள் தான். அதைத்தான் எங்கள் ஆட்சி இன்றைக்கு வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை படி என சொல்லுகிறார்கள். படி என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் இதை கவர்னர் சொல்லக்கூடாது. கவர்னர் உடைய வேலை இது அல்ல அவருடைய வேலை நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவது தான். ஆனால் அவர் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என கூறுவது அரசியல் சட்டத்தின் வரம்பை மீறுவது ஆகும். இதனால்தான் அன்றைக்கே அம்பேத்கர் சொன்னார் கவர்னர் பதவி வேண்டாம் என்று. ஆனால் இன்றைக்கு ஒரு மாநிலத்திற்கு ஒரு கவர்னர் போய் ஊர் ஊருக்கு ஒரு கவர்னர் வந்து விடுவார்கள் போல் உள்ளது.
அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
குறிப்பாக தமிழகத்தில் அடித்தட்டில் உள்ள மக்கள் படிக்கவே முடியாது ஒரே ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் படிக்க முடியும். கிறிஸ்தவ மிஷனரிகள் வந்த பிறகுதான் அடித்தட்டு மக்கள் ஏழை மக்கள் எல்லோரும் படிக்கக்கூடிய சூழல் உருவானது. முதலில் கிறிஸ்டியன் மிஷனரிகள் கன்னியாகுமரியில் தான் இதை தொடங்கியது. அதனால் தான் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் உயர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் கிறிஸ்துவ மிஷனரிகள் தான்.