அரசு மணல் குவாரியை தடை விதிக்க கோரி அரும்பருதி கிராம மக்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்பாடி;பிப்,27-
வேலூர் மாவட்டம் அரும்பருதி பாலாற்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்குவாரியில் அரசு விதித்த சுமார் 400 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் என்ற அளவை காட்டிலும் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் அரும்பருதி கிராம மக்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அரும்பருதி கிராம மக்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரித்துள்ளனர்.
வரலாற்றில் எந்திரங்களை பயன்படுத்தி சுமார் 20 அடி வரை மணல் முற்றிலுமாக அள்ளப்பட்டதால் கோடை காலத்தில் சந்திக்க வேண்டிய குடிநீர் பிரச்சனையை தற்போது சந்திக்க துவங்கியதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆகவே அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அரசு மணல் குவாரியை மூட வேண்டும் இல்லை என்றால் எங்கள் கிராம மக்கள் சார்பாக தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர்.
குறிப்பு:
மணல் குவாரிக்கு எதிரான கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், பாலாற்றில் மணல் குவாரியை போட்டோ மற்றும் வீடியோ எடுக்க சென்றபோது செய்தியாளர்களை சூழ்ந்த மணல் குவாரி குண்டர்கள் அவர்களை தாக்க முற்பட்டதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் மற்றும் காவல் துறையினர் வந்து செய்தியாளர்களை மீட்டு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.