திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இணையத்தில் தவறான தகவல் பரவி வரும் நிலையில், பீகார் அதிகாரிகள் குழு திருப்பூரில் இன்று ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு அதிகாரிகள் குழு செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சிலர் வேண்டுமென்றே இணையத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இணையத்தில் தீயாக பரவிய இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது வதந்தி என்று தமிழக அரசும், பீகார் அரசும் விளக்கம் அளித்துள்ளன. இந்நிலையில், பீகாரில் இருந்து தமிழகம் வந்த அதிகாரிகள் குழுவினர், திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தவறான தகவல்
அதாவது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஹிந்தி பேசியதால் கொல்லப்பட்டதாக 100% பொய்யான தகவலை பரப்புகிறார்கள். உடனடியாக களத்தில் இறங்கிய தமிழக போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய பாஜக நிர்வாகியை கைது செய்ய பீகாரிலும் போலீசார் விரைந்துள்ளனர். இதேபோல், இணையத்தில் பரவிய இதுபோன்ற போலி வீடியோக்கள் பீகாரிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு அதிகாரிகள் குழு அங்கிருந்து தமிழகம் விரைந்தது. அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு இன்று திருப்பூரில் வட மாநில ஊழியர்களை நேரடியாக சந்தித்தனர்.
நடவடிக்கை
இந்த விவகாரத்தில் பரவும் வதந்திகள் குறித்து வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து நிறுவனங்களுக்கும் சென்று வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வதந்தி குறித்து வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இதனிடையே, திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பீகார் அதிகாரிகள் குழு, “திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பல சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினோம். பீகார் சங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள்.இன்று திருப்பூர் வந்துள்ளோம்.இங்கும் மாவட்ட அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
நடவடிக்கை
தொழிலாளர் சங்கம் தொடங்கி பலரிடம் பேசினோம். சிலர் சமூக வலைதளங்களில் பழைய மற்றும் போலியான வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இது உண்மையாக இருக்குமோ என்று சிலர் அஞ்சுவதால் சில வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்தனர். போலி செய்திகளை தடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் சென்று இது குறித்து விளக்கி வருகின்றனர். தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. உதவி மையம் உருவாக்கப்பட்டது. மேலும் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றத்தை குறைக்கிறது
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பதற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பும். பீகாரில் இருந்து பணிபுரியும் ஊழியர்களையும் சந்தித்து பேச உள்ளோம். அவர்கள் அளிக்கும் தகவல்களை திருப்பூர் நிர்வாகத்திடம் தெரிவிப்போம். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், திருப்பூர் நிர்வாகமும் இதுவரை எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்திகரமாக உள்ளன. இதற்காக நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.