மகளை காதலித்து திருமணம் செய்த மருமகனை பெண்ணின் குடும்பத்தினர் நடுரோட்டில் ஆடு அறுப்பது போல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைலர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியை அடுத்த புரம்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சரண்யா (21). இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் ஜெகனுக்கும் சரண்யாவுக்கும் திருமணம் நடந்தது. இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் ஜெகனை கொலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் ஜெகன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அணைக்கட்டு சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சரண்யாவை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர், சரண்யாவை கீழே தள்ளிவிட்டு, ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ஜெகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் ஜெகனின் மாமனார் சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து நீதிபதி முன்பு அளித்த வாக்குமூலத்தில், மகளை காதலித்து, மகளுக்கு வசதியாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.