வேலூரில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க ஆந்திர மாநில எல்லையான கிருஸ்டியான்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் வேலுார் டிஐஜி, எஸ்பி தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் செம்மரக்கட்டைகள் உட்பட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தல் பெருமளவில் நடந்து வருகிறது. இதையடுத்து ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடத்தல் செம்மரம், கஞ்சா போன்ற பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் காட்பாடி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையான கிருஸ்டியான்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் வேலுார் டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனைச் சாவடிகளில் இருந்து தடுப்பான்களில் போதுமான அளவுக்கு ஔிரும் பட்டைகள் (ரிப்ளெக்டிங் ஸ்டிக்கர்) ஒட்டப்பட்டுள்ளதா?, அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தினார். மேலும், சோதனை சாவடி அமைந்துள்ள இடத்தில் சாலையே மேலும் விரிவுபடுத்துவது, வாகனங்களை சோதிக்க வசதியான இடவசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் எஸ்பியிடம் கலந்தாலோசித்தார்.
பிறகு சாலையோரங்களில் ஆதரவிற்றி படுத்துக் கிடந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் உண்மையில் ஆதரவில்லாதவர்களா? என்று விசாரித்தும், அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை காப்பகத்துக்கு அனுப்புவது, அவர்களுடைய முழுவிவரங்களை சேகரித்து வைப்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
பிறகு காட்பாடி எல்லையோர பகுதியில் நடந்து வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு நடத்தினார்.
Please Fallow : Google News
Please Fallow : Telegram