தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4-லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
எமக்கலாபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு
எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். எஸ். சுரேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அருள் கலாவதி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி. ஜெரால்டு இன்னாசி முன்னிலை வகித்தார்.பற்றாளர் மு. ஜெயா, சுகாதாரத்துறை , கால்நடைத்துறை , வேளாண்மைத்துறை,கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், நியாய விலை கடை அலுவலர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். எமக்கலாபுரம் ஊராட்சி செயலர் சோபனா தீர்மானங்களை வாசித்தார். அதில்
உலக தண்ணீர் தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீரினை பாதுகாத்தல், பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீரினை சேகரித்தல் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு ஏதுவாக அனைத்து நீர் நிலைகளையும் கணக்கெடுத்து அதற்கான திட்டங்களை தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல், ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத் தொகை செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் 2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது குறித்த பொருளும் விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் சிறுதானிய விவசாயம், குறைவான நீரில் அதிக விளைச்சல், சிறுதானியத்தினை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், கிராம ஊராட்சியில் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக பணிகள், கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக இணையதள வசதி மற்றும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் ஆகியவை குறித்து கிராம சபையில் தெரிவிக்கப்பட்டு அதனை குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்- பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தேர்வு, கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்புக்கு ஒப்புதல் முதலானவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.நீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக கடந்த 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து தண்ணீரை வீண் செய்யாமல், மாசுபடுத்தாமல், சிக்கனமாக பயன்படுத்துவோம் என உலக நீர் தினத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாயத்துறை, கூட்டுறவுத்துறை, ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.